Enter your Email Address to subscribe to our newsletters
ராணிப்பேட்டை, 18 டிசம்பர் (H.S)
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் வீதியில் இ-சேவை மையத்தை வைத்து நடத்திவரும் பெண் ஒருவர், கிராம மக்களை மட்டுமே குறிவைத்து அவர்களுக்கு அரசு வேலை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் ஆசை வார்த்தையை நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் ஒவ்வொருவராக புகார் அளிக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
சோளிங்கர் மேல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகா(36). இவர் பஜார் வீதியில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது இ-சேவை மையத்திற்கு வரும் பொது மக்களிடம் இயல்பாக பேசி பழகி, அவர்களுக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.
குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் பொது மக்களை குறிவைத்து, அவர்களிடம் தனக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் நல்ல நட்பு உள்ளதாகவும், அதன் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பிய பொதுமக்கள் சிலர் தங்களது பிள்ளைகளுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளனர். அவ்வாறு பணத்தை கொடுத்த பொது மக்களுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் கடிதத்தைப் போல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பெயரோடு பணி நியமன ஆணை வரை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் கார்த்திகா கொடுத்த பணி நியமன ஆணையை வைத்து ஒருவர் பணிக்கு சேர சென்றபோது, தனக்கு வந்த கடிதம் பொய்யானது என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் பல மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல முதியவர்களிடம் கார்த்திகா உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி அதற்கு போலியாக ஏடிஎம் கார்டை தயாரித்து வழங்கியுள்ளார்.
மேலும் கட்டுமான ஊழியர்களுக்கு கடன் பெற்று தருவதாகவும், கட்டுமான தொழிலாளர் அட்டை பெற்று தருவதாகவும் கூறி பலரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் கடந்த 10ம் தேதியன்று கார்த்திகாவின் இ-சேவை மையத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்ததோடு அந்த மையத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பரவலாக பேசப்படுவதால், கார்த்திகாவிடம் பணம் கொடுத்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தற்போது புகார் அளிப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
பணம் கொடுத்து ஏமாந்த பலர் அடுத்தடுத்து புகார் அளிக்க வருவதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கோடி ரூபாய் வரை கார்த்திகா மோசடி செய்திருப்பதாக கூறும் பொதுமக்கள், தாங்கள் வழங்கிய பணத்தை கேட்டால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டும் தோணியில் பேசுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / RAJ .T